முதன்மை
பொது விநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டிட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972 ஆம் ஆண்டு அன்றைய மாண்புமிகு முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலத்தில் வசிக்கும் மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இது போன்ற அமைப்பை நாட்டிலேயே முதன் முதலில் அமைத்த பெருமைக்குரியது தமிழ்நாடு.
நிறுவனங்கள் சட்டம், 1956 சட்டப்பிரிவு 25-ன் கீழ் (நிறுவனங்கள் சட்டம், 2013 சட்டப்பிரிவு 8) இந்நிறுவனம் ‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்’ என்ற பெயரில் 01.04.2010 அன்று பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களை இயக்குநர்களின் குழுமத்தின் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் 33 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, முதுநிலை மண்டல மேலாளர்கள்/ மண்டல மேலாளர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. இக்கழகத்தின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நியாய விலைக்கடைகள் மற்றும் மாநிலம் முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் 7,293 நிரந்தர பணியாளர்களும், 5,111 பருவ கால பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, கழக கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் 5,199 சுமைதூக்கும் தொழிலாளர்களும், 27,845 பருவகால சுமைதூக்கும் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.